Wednesday, December 20, 2006

கருணை வேளாண்மை

அன்புப் பயிர் வளர்க்க
ஆனது ஒரு வழி
நெஞ்ச மேடுபள்ளம்
உழுது சமன்படுத்து
ஆண்டவனை வணங்கி
அருள்மழை தருவி
நல்லெண்ண விதை எடுத்து
உறவு நஞ்சை எங்கும் தூவு
சிறுவட்ட நாற்றைப் பிடுங்கி
பெருவட்டத்தில் பரப்பு
பொருளுதவி உரமிட்டுப்
புண்ணியங்கள் சேமி
எதிரிகளிடம் மட்டும்
பூச்சிக்கொல்லியாய் மாறு
ஊழல் களைகள் உயிர் குடிக்கவரும்
கடுந்தண்டனைக் களைக்கட்டால்
வீணர்களை வேரறு
அன்புப் பயிர் செழித்து
அவனி நிறையட்டும்
நிம்மதிப் பெருவிளைச்சல்
நம் நெஞ்சை நிரப்பட்டும்.

Tuesday, December 19, 2006

மனத் தராசு

காமத் தட்டும்
ஞானத் தட்டும்
மாறி மாறி ஏறி இறங்கி
ஆடும் ஊஞ்சல்
அதட்டி நிறுத்தி
நடுமுள் என்றும்
நிலையில் நின்று
வானம் நோக்கும்
வலிமை தந்து
களம் சில நின்று
வளம் பல கொன்று
விண்ணை அடைந்து
விடுதலை ஆகும்
வரம்கொடு இறைவா;
வணங்குதல் கடனே.

Saturday, December 9, 2006

பஞ்ச தந்திரம்

திருநடனம் காண, தெருநடனம் மூடு
சிலம்பொலி கேட்க, வம்பொலி கட
பெருவெடிப்பின் மணம் கமழ, கீழ்நாசி அடை
அருமௌன அமுதுண்ண, அழல்வாய்ப் புதை
செந்தீயில் கருக, செல்புண்கள் சிதை
ஐம்புலக் காட்டை அடியோடு அழித்து
செம்பொருள் காணும் சிந்தையில் நிறுத்து
நீ அலாத நினைப்பொன்று
நெஞ்சிலில்லா நிலைகொடு
உன்னைக் கொள்ள, என்னைக் கொல்
யானும் அழிய; எனதும் கரைய,
இறைவா!

Saturday, December 2, 2006

உயிர் எழு(த்)து

அழுக்கு மனம் நீக்கி,
ஆன்மாவைத் தரிசி.
இருமை விலக,
ஈகை நிறையும்.
உலகியலை உணர்ந்து,
ஊழினை நடத்து.
எல்லையில்லா இறைமையின்,
ஏகாந்தம் கண்டுணர்.
ஐயம் தெளியும்.
ஒன்றில் நிலைத்து,
ஓய்வில் விழி.
ஒளடதம் இஃதே.