Thursday, August 21, 2008

உனக்கும் எனக்கும்


இன்று

என் கனவுகளும்

கவலைகளும்

உன் காலடியில்

படையல்களாய்

ஆலிங்கனம் வேண்டி.

காலத்தில் வருவாய்;

கவலையில்லை.

ஆனாலும்

கதவைத் தட்டிக்கொண்டே இருப்பேன்

உன் உறக்கம் கலைக்க அல்ல

என் மயக்கம் விலக்க.

- - - - - - -

என்னைச் சுற்றி

ஏராளமாய்ப் பூதங்கள்.

விலக்கும் வழி,

உன்னை வேண்டுதல் அல்ல;

என்னைத் தோண்டுதல்.

- - - - - - -

சுற்றிச் சுற்றி வருகிறது

ஒரு ஈ

என்னுள்ளே இருக்கும்

ஒரு ஈயின் பிம்பமாக

ஆம்

இன்னும் நான்

அவ்வப்போது

மலங்களின் மீது.

- - - - - - -

வெண்ணை மலையில்

குடியிருப்பு

வீதியில் நெய்வேண்டிப்

பரிதவிப்பு.

- - - - - - - - -

அண்டத்தில் ஒரு தூசு

சூரியன்;

சூரியனில் ஒரு தூசு

பூமி;

பூமியில் ஒரு தூசு

இல்லம்.

உள்ளே முழு அண்டம்

உனக்காகக் காத்திருக்க

தூசுகளின் தூசு மீது

உள்ளம்.

- - - - - - -

More than a Blog Aggregator

Wednesday, August 20, 2008

மீண்ட சொர்க்கம்

பெருங்கருணைத் தாயே
பேரறிவுத் தந்தையே
உங்களை மறந்து
மண்ணிலே இறைந்து
இன்று
மனம் வருந்தி
மன்னிப்பு வேண்டி
திருமுகம் காண
கதவைத் தட்டிக்
காத்திருக்கிறது
உங்கள் மழலை
அம்மையப்பனே
அடைக்கலம் தா.

தந்தையே எந்தன்
கொடுங்காமம் கொல்க
தாயே எந்தன்
கடுங்கோபம் வெல்க
இரட்டைத் தடுப்புகளும்
இடிந்து போகட்டும்
இறைவனின் இறக்கம்
இப்பொழுதே ஆகட்டும்
ஊடகமாக மாறுவேன்
உலகம் உய்ய.

Monday, August 4, 2008

பாதிக்கிணறு


இது
ஒருவர் வாழும் ஆலயம்

நான் விழித்திருக்கையில்
நீ உறங்குகிறாய்;
நான் உறங்குகையில்
நீ விழிக்கிறாய்.

நான்
எனக்குள் நீ
உனக்குள் நான்
நீ.

அன்று
இன்று
நாளை
என்று?

Tuesday, July 29, 2008

வழிவிடு - வழிபாடு

இறைவா
உன் இறக்கத்திற்கும்
உன் இயக்கத்திற்கும்
எவை எவை
தடைகளோ
அவைகளைச்
சுட்டுவதும்
வெட்டுவதும்
உன் பொறுப்பு

கைகட்டி வாய்பொத்தி
வழிவிடுவதே, என் இருப்பு.

கைகட்ட,
உணர்வு அடங்கி ஆசை அழியும்;
வாய்பொத்த,
மனம் அடங்கி அறிவு களையும்.

சர்வமும் சமர்ப்பணம்.

நடுவீதியில் இதயம்

பாதி மனிதம் அறிவை விரிக்க
மீதி மனிதம் ஆற்றலைப் பெருக்க
சிறுபான்மை இதயம் சுறுங்கிச் சுறுங்கி
இன்று அனாதையாய்.

'வேகும் தலை' தம்பிடி பார்க்க
'சாகும் கால்' வெற்றியில் திளைக்க
‘போகாப் புனலோ' வெற்றோடையாய்.

எதிர் எதிர் துருவத்தில்
தலையும் காலும்;
அதனால்,
தடுமாறும் பருவங்களால்
பலியாகும் பூமி.

இனியும் சுருங்க இடமில்லா நிலையில்
அன்பு இதயம் பொங்கிப் பெருக
அறிவும் அடங்கும்;
ஆற்றலும் வணங்கும்.
நீதியான அன்பு
நிறையருளால் விரிந்து
அறிவையும் ஆற்றலையும்
இரு கண்களாய் ஏந்தி
ஏகன் ஆட்சியை இகத்தில் நிரப்பும்.

வாழ்க வையகம்; வாழ்க வளமுடன்.

Saturday, March 15, 2008

நங்கூரமும் சுக்கானும்

வேகம் கருதி வைக்கப்பட்ட
பெரிய பாய்மரத்தால்,
காமக் காற்றில்
இப்படகு தடுமாறுகின்றது.

இறைவா,
தடுமாற்றம் என்பதும்
உனது கருணையே

தறியின் தடுமாற்றம் - நெசவு;
மத்தின் தடுமாற்றம் - வெண்ணெய்;
மனதின் தடுமாற்றம் - ஞானம்.

ஞானத்திற்கு முன்பு
வேண்டாமே மரணம்.

தடுமாற்றம் தவறில்லைதான்
ஆனால் திசைமாற்றம்?

இன்றைய அவசரத் தேவை
ஒரு நங்கூரம்;
தடுமாற்றம் குறைக்க.

நாளைய அவசியத் தேவை
ஒரு சுக்கான்;
திசைமாற்றம் தடுக்க.

குப்பைக்குள் மாணிக்கம்

பெருகிய வக்கிரங்களால்
மனமெலாம் குப்பைகள்

மாணிக்கம் எடுக்க
குப்பைக்குள் எறிந்தாய்

மின்னும் மாணிக்கம்
கையிலே உள்ளது;
சுவாசப்பைகளோ
மலங்களால் நிறைந்தது.
கண்கள் இருள,
கைப்பொருள் நழுவிடுமோ?

இறைவா
இது வெற்றியா,
இல்லை தோல்வியா
உனக்கு?

குண்டுச் சட்டிப் பயணம்

கண்ணடைப்பு வேண்டுவது
குதிரைக்கு மட்டுமல்ல;
ஓட்டுபவனுக்கும்தான்.

எனவே
இவனை
குண்டுச் சட்டிக்குள் அடை.

பழுதில்லை
இப்பயணத்தில் தேவை
வேகமே; தூரம் அல்ல.

இவனைக் கூட்டுப் புழுவாக்கு
மாற்றம் பெறும்வண்ணம்.
மாற்றம் பெறும் வண்ணம்;
மாறுதல் எவரும் அறியாதவண்ணம்.

காய வாசம்

எல்லாம் உனது
என்றுணர்ந்தபோது
'வெற்றி'யின் துள்ளல் மட்டுமல்ல
'தோல்வி'யின் துவலளும் மறைந்தது.

இரண்டுமற்ற நிலையே
எல்லையில்லா ஆனந்தம்
அன்று அறிய வைத்தாய்;
இன்று உணர வைத்தாய்.

நன்றி கூறக்கூட
இன்றெனக்கு அனுமதியில்லை;
யாருக்கு யார் நன்றி கூற.

இன்னும் ஒன்று மட்டும்
மிச்சம் உள்ளது
பெருங்காய வாசனையாக

விரைவில்
'அதுவும் போய்விடும்'
உன்
அளப்பரிய கருணையினால்.

காலக் கணக்கு

இறைவன் கொடுக்க நினைப்பதை
மனிதனால் தடுக்க முடியாது;
இறைவன் கொடுக்க மறுப்பதை
மனிதனால் எடுக்க முடியாது

பெறுவதே வெற்றியல்ல:
இழப்பதே தோல்வியல்ல.

கொடுப்பதன் மூலம் தாக்கவும்
தடுப்பதன் மூலம் காக்கவும்
அவனால் முடியும்.

எனவே
பெறுவதும் சாபம் ஆகும்;
துள்ளாதே.
இழப்பதும் வரம் ஆகும்;
துவளாதே.

மாற்றுப் போர்வைகள் சுமந்துவரும்
வெற்றிகளும் தோல்விகளும்
மாறும் மாறும் காலந்தோறும்.

காலன் மாற்றும் கணக்குகளைக்
‘கண்டு’ தெளிந்தவன்
கலங்குவதில்லை, ‘தோல்வியில்’;
கர்விப்பதில்லை, ‘வெற்றியில்’.

அவன் நெஞ்சினிலே நிறையும்
நித்திய நிம்மதி.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.