Thursday, August 21, 2008

உனக்கும் எனக்கும்


இன்று

என் கனவுகளும்

கவலைகளும்

உன் காலடியில்

படையல்களாய்

ஆலிங்கனம் வேண்டி.

காலத்தில் வருவாய்;

கவலையில்லை.

ஆனாலும்

கதவைத் தட்டிக்கொண்டே இருப்பேன்

உன் உறக்கம் கலைக்க அல்ல

என் மயக்கம் விலக்க.

- - - - - - -

என்னைச் சுற்றி

ஏராளமாய்ப் பூதங்கள்.

விலக்கும் வழி,

உன்னை வேண்டுதல் அல்ல;

என்னைத் தோண்டுதல்.

- - - - - - -

சுற்றிச் சுற்றி வருகிறது

ஒரு ஈ

என்னுள்ளே இருக்கும்

ஒரு ஈயின் பிம்பமாக

ஆம்

இன்னும் நான்

அவ்வப்போது

மலங்களின் மீது.

- - - - - - -

வெண்ணை மலையில்

குடியிருப்பு

வீதியில் நெய்வேண்டிப்

பரிதவிப்பு.

- - - - - - - - -

அண்டத்தில் ஒரு தூசு

சூரியன்;

சூரியனில் ஒரு தூசு

பூமி;

பூமியில் ஒரு தூசு

இல்லம்.

உள்ளே முழு அண்டம்

உனக்காகக் காத்திருக்க

தூசுகளின் தூசு மீது

உள்ளம்.

- - - - - - -

More than a Blog Aggregator

Wednesday, August 20, 2008

மீண்ட சொர்க்கம்

பெருங்கருணைத் தாயே
பேரறிவுத் தந்தையே
உங்களை மறந்து
மண்ணிலே இறைந்து
இன்று
மனம் வருந்தி
மன்னிப்பு வேண்டி
திருமுகம் காண
கதவைத் தட்டிக்
காத்திருக்கிறது
உங்கள் மழலை
அம்மையப்பனே
அடைக்கலம் தா.

தந்தையே எந்தன்
கொடுங்காமம் கொல்க
தாயே எந்தன்
கடுங்கோபம் வெல்க
இரட்டைத் தடுப்புகளும்
இடிந்து போகட்டும்
இறைவனின் இறக்கம்
இப்பொழுதே ஆகட்டும்
ஊடகமாக மாறுவேன்
உலகம் உய்ய.

Monday, August 4, 2008

பாதிக்கிணறு


இது
ஒருவர் வாழும் ஆலயம்

நான் விழித்திருக்கையில்
நீ உறங்குகிறாய்;
நான் உறங்குகையில்
நீ விழிக்கிறாய்.

நான்
எனக்குள் நீ
உனக்குள் நான்
நீ.

அன்று
இன்று
நாளை
என்று?