Saturday, August 22, 2009

ஏமம் செய்த ஏலம்

ஒரு வன இலாகா அதிகாரியின் மனைவி 8000 ரூபாய்க்கு
விற்கப்பட்ட செய்தி நெஞ்சைக் கிழித்ததில் கொட்டிய சில வரிகள்.
--------------------------------

“ஏமம் செய்த ஏலம்”


தலைமைக் கணவனின் சூதாட்டப் பொருளாய்
செத்துக் கெடுத்தவனின் சிதை விறகாய்
குஷ்டக் கணவனின் பயண ரதமாய்
பெண்கள் 'பொலிந்த' பெரு நாடிது.

முன்னோர் வகுத்த முறை தவறாமல்
என்னை விற்றான் என் அருங் கணவன்
காதல் மயக்கத்தில்
'மாமா' என நான் விளித்ததுண்டு
இன்றதற்கு வேறு பொருள் கொடுத்தான்
நன்றி கெட்டவன்.

தேவி பக்தர்களே, ஒரு நிமிடம்
நாங்கள் யார்,
பொருளா, விறகா, ரதமா?
தெய்வம் எனப் பசப்ப வேண்டாம்

பொன்னென்றும், பொருளென்றும்
முத்தென்றும், மணியென்றும்
கொஞ்சியபோது மதி மயங்கினோம்;
தெளிந்தபோது விதி விளங்கினோம்.

எங்களை வணங்கவும் வேண்டாம்;
விற்கவும் வேண்டாம்.
வாழ்த்தவும் வேண்டாம்;
வதைக்கவும் வேண்டாம்.

அர்த்த நாரீஷ்வரா!
பாதி அழுகிய பகவானே
இனி எங்களைப்
பசுவாகவாவதுப் படை
(காக்கத் தனிப்படை உண்டே)
வெட்கம் கெட்ட இவ்/இல் வாழ்க்கைக்கு
விலங்கு வாழ்க்கையே கௌரவம்.

Saturday, August 15, 2009

கொடு

பொருள் கிடைத்தால், பொருள் கொடுப்பேன்
அருள் கிடைத்தால், அருள் கொடுப்பேன்

பொருளை
காணாதவர்க்குக் கொடுத்தால்
கருணை என்கிறார்கள்;
கண்டவர்க்குக் கொடுத்தால்
காமம் என்கிறார்கள்.

எனவே
பொருள் வேண்டாம் இறைவா
அருள் கொடு.
பின்
யாருக்குக் கொடுத்தாலும்
கருணையே நிலையாகும்.