Saturday, March 15, 2008

நங்கூரமும் சுக்கானும்

வேகம் கருதி வைக்கப்பட்ட
பெரிய பாய்மரத்தால்,
காமக் காற்றில்
இப்படகு தடுமாறுகின்றது.

இறைவா,
தடுமாற்றம் என்பதும்
உனது கருணையே

தறியின் தடுமாற்றம் - நெசவு;
மத்தின் தடுமாற்றம் - வெண்ணெய்;
மனதின் தடுமாற்றம் - ஞானம்.

ஞானத்திற்கு முன்பு
வேண்டாமே மரணம்.

தடுமாற்றம் தவறில்லைதான்
ஆனால் திசைமாற்றம்?

இன்றைய அவசரத் தேவை
ஒரு நங்கூரம்;
தடுமாற்றம் குறைக்க.

நாளைய அவசியத் தேவை
ஒரு சுக்கான்;
திசைமாற்றம் தடுக்க.

குப்பைக்குள் மாணிக்கம்

பெருகிய வக்கிரங்களால்
மனமெலாம் குப்பைகள்

மாணிக்கம் எடுக்க
குப்பைக்குள் எறிந்தாய்

மின்னும் மாணிக்கம்
கையிலே உள்ளது;
சுவாசப்பைகளோ
மலங்களால் நிறைந்தது.
கண்கள் இருள,
கைப்பொருள் நழுவிடுமோ?

இறைவா
இது வெற்றியா,
இல்லை தோல்வியா
உனக்கு?

குண்டுச் சட்டிப் பயணம்

கண்ணடைப்பு வேண்டுவது
குதிரைக்கு மட்டுமல்ல;
ஓட்டுபவனுக்கும்தான்.

எனவே
இவனை
குண்டுச் சட்டிக்குள் அடை.

பழுதில்லை
இப்பயணத்தில் தேவை
வேகமே; தூரம் அல்ல.

இவனைக் கூட்டுப் புழுவாக்கு
மாற்றம் பெறும்வண்ணம்.
மாற்றம் பெறும் வண்ணம்;
மாறுதல் எவரும் அறியாதவண்ணம்.

காய வாசம்

எல்லாம் உனது
என்றுணர்ந்தபோது
'வெற்றி'யின் துள்ளல் மட்டுமல்ல
'தோல்வி'யின் துவலளும் மறைந்தது.

இரண்டுமற்ற நிலையே
எல்லையில்லா ஆனந்தம்
அன்று அறிய வைத்தாய்;
இன்று உணர வைத்தாய்.

நன்றி கூறக்கூட
இன்றெனக்கு அனுமதியில்லை;
யாருக்கு யார் நன்றி கூற.

இன்னும் ஒன்று மட்டும்
மிச்சம் உள்ளது
பெருங்காய வாசனையாக

விரைவில்
'அதுவும் போய்விடும்'
உன்
அளப்பரிய கருணையினால்.

காலக் கணக்கு

இறைவன் கொடுக்க நினைப்பதை
மனிதனால் தடுக்க முடியாது;
இறைவன் கொடுக்க மறுப்பதை
மனிதனால் எடுக்க முடியாது

பெறுவதே வெற்றியல்ல:
இழப்பதே தோல்வியல்ல.

கொடுப்பதன் மூலம் தாக்கவும்
தடுப்பதன் மூலம் காக்கவும்
அவனால் முடியும்.

எனவே
பெறுவதும் சாபம் ஆகும்;
துள்ளாதே.
இழப்பதும் வரம் ஆகும்;
துவளாதே.

மாற்றுப் போர்வைகள் சுமந்துவரும்
வெற்றிகளும் தோல்விகளும்
மாறும் மாறும் காலந்தோறும்.

காலன் மாற்றும் கணக்குகளைக்
‘கண்டு’ தெளிந்தவன்
கலங்குவதில்லை, ‘தோல்வியில்’;
கர்விப்பதில்லை, ‘வெற்றியில்’.

அவன் நெஞ்சினிலே நிறையும்
நித்திய நிம்மதி.

எல்லாப் புகழும் இறைவனுக்கே.