Thursday, December 6, 2007

குரு தட்சணை

கொடுக்கப்பட்ட
மனக் கள்ளக்கோல்
மாங்கனியைப் பறிக்கவே;
மாதுளங்களை அல்ல.

அதிகாரத்தின் தவறான உபயோகம்
தரும் பரிதாபப் பணிநீக்கம்.

* * * * * * * * *

குருவிற்கும்
வித்தைக்கும் ஏற்ப
தட்சணையும் மாறும்.

உயர்ந்த குருவிற்கு
உன்னத வித்தைக்கு
உனது தட்சணை குறைவுதான்.

* * * * * * *

வித்தை விதைக்கப்படுவதும்
நாளை அறுக்கப்படுவதும் உறுதி.

தட்சணை அவனால்
தட்டிப் பறிக்கப்படுவதைவிட
அடிபணிந்து கொடுப்பதே
அறிவுடமை.

கொடுத்துவிடு.

விட்டில் பூச்சி

‘யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’

மண்டையில் ஏற்றிய இறைவா
மனதில் ஏற்றாதது ஏனோ?

எத்தனை முறை விட்டில் ஆவது
எத்தனை முறை உயிர்த்தெழுவது
ஒரு பிறப்பில் இத்தனை மரணங்களா?

போதும் இந்த மரண விளையாட்டு,

இதுவரை காத்தமைக்கு (GUARD) நன்றி
இனி விஷப்பரிட்சை இல்லை.

இதுவரை காத்தமைக்கும் (WAIT) நன்றி
இதோ வந்துகொண்டிருக்கிறேன்.

கருகிய சிறகுகள்
காற்றிலே பறக்கட்டும்

விளக்குகளை;
குத்து(ம்) விளக்குகளை
வட்டமடிக்கும் வெட்டிச் சிறகுகள்
இனி வேண்டாம்
ஒருவழிப் பாதையில்
ஊர்ந்து வந்தாவது
உனை அடைதல் உறுதி
என்றாவது ஒரு நாள்.

கடைசி ஆசை

என்றோ விழுந்த விதை
இன்றைய மழையில் விழித்தது
நீரும் உரமும் இட்டோம்
நாளும் நாளும் இட்டோம்
பூத்துக் குலுங்கின மலர்கள்
கொத்து மலர்கள் எடுத்தேன்
முத்துச் சரமும் தொடுத்தேன்
கழுத்தில் இடம் இல்லை
எனவே
கைகளில் கொடுத்தேன்.

‘மகரந்தம் மூச்சை அடைக்கிறது.
நச்சு மலர்கள்; நலமற்றவை.
அழகு பார்க்கலாம்: அணிய முடியாது’
வீசி எறிந்தாய் தொட்டியில்
விழுந்ததோ என் மனம்.

இது காலங்களாய் வளர்ந்த தோட்டம்
இனிய கனவுகளால் மலர்ந்த தோற்றம்
வெட்டி எறிய மனமில்லை
பட்டுப் போகட்டும் என விட்டுவிட்டேன்.
இனி நீரில்லை, உரமில்லை.
மலர்களே என்னை மன்னித்துவிடுங்கள்.

* * * * * * * * *

இறைவா!

முட்டாளாக்கப்படுவது
எனக்குப் புதிதல்ல;
ஆனால்
உன்னாலுமா?

தூக்குமேடையில்
இறுதி ஆசை
இயலாததே என்றாலும்
கேட்பது ஒரு சம்பிரதாயம்.

சம்பிரதாயத்தை முடித்துக்கொண்டாய்
சடங்குகளை நிறைவேற்று.

வெற்றித் தோல்வி

பணிக்கப்பட்டது நிர்வாணம்
மனம் யாசித்தது கோவணம்
கிடைத்ததோ சொத்தைக் கடலை.

பட்டுக் கோவணத்தில்
பலப்பல ஓட்டைகள்
சொத்தைக் கடலையின்
சுயரூப தரிசனம்.

இறைவா
உன் விளையாடல் தெரிகிறது.

புனித நீராட்டின்
அவசியம் மட்டுமல்ல; அதன்
அவசரமும் புரிகிறது.

இதோ
கை விறகையும்
என் சிதையில் எறிகிறேன்

ஊடலில் மட்டுமல்ல
உன்னிடத்தும்
தோற்றவரே வென்றார்

சரணம்
முழுமையான சரணம்.